நாமக்கல் அருகே, அதிகாலை கோயில்களில் சுப்ரபாதம் பாட்டு போடும் போதில் இருந்தே கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்பனையைத் தொடங்கி விடுவதாக பிடிபட்ட குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பரமத்தி வேலூர் காவல் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் காவலர்கள், பரமத்தி வேலூர் பழைய புறவழிச்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்ததோடு, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 103 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பரமத்தி வேலூர் நான்கு சாலை, சிவா திரையரங்க பகுதி ஆகிய இடங்களில் அனுமதியின்றி மதுபானங்களை விற்றதாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த சரவணன் என்கிற செந்தாமரைக்கண்ணன் (25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, எல்லை மேடு பகுதியில் நடந்த சோதனையில் டாஸ்மாக் கடை அருகே கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்ததாக பாலப்பட்டியைச் சேர்ந்த நிஷாந்த் (24) என்பவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 74 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பும், இரவு பத்து மணிக்கு மேலும் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிகாலை 5 மணிக்கு கோயில்களில் சுப்ரபாதம் பாட்டு போடும்போதே இவர்களும் சந்துக்கடைகளில் மதுபானங்களை விற்கத் தொடங்கி விடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களுடன் தொடர்பில் உள்ள கும்பல் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.