கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ளது அரசம்பட்டு. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை (50). இவர், அப்பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக அரியலூர், திருக்கோவிலூர், சங்கராபுரம் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அஞ்சலை, 'இனிமேல் கள்ளத்தனமாக சாராயம் விற்க மாட்டேன். உழைத்துச் சாப்பிடுவேன்' என அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளார். அவரது உறுதிமொழியை ஏற்று நன்னடத்தையின் பேரில் அஞ்சலையை போலீசார் விடுதலை செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் அஞ்சலை, கள்ளச்சாராயம் விற்றதால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நன்னடத்தை மீறியதற்காக கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் அஞ்சலை ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின், 151 நாட்கள் அஞ்சலையை சிறையில் அடைக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மீதும் ஏற்கனவே கள்ளச் சாராயம் விற்றதாக கச்சிராபளையம், கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
சாராயம் விற்க மாட்டேன் என்று உறுதி அளித்து வெளியேவந்த அஞ்சலை, கடந்த வாரம் இந்த ஜெயராமனுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளார். இதனால், அவரையும் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். சொன்னதை மீறி கள்ளச் சாராயம் விற்றவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.