விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவர் அதே ஊரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வரவு செலவு கணக்கு வைத்து பயன்படுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவரின் வங்கி கணக்கை அந்த வங்கி மேலாளர் திடீர் என்று முடக்கம் செய்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குப்பன் இதுகுறித்து வங்கி மேலாளரை அணுகி விவரம் கேட்டுள்ளார். அப்போது வங்கி மேலாளர் மோசடி குற்றச்சாட்டு காரணமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு பரிந்துரை கடிதத்தை அனுப்பினார். அதன் அடிப்படையில் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த குப்பன், அதைத் தொடர்ந்து தனது வங்கி கணக்கை முடக்கி வைக்குமாறு எந்த அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பினார்? அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். குப்பனின் கடிதத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் உரிய விசாரணை செய்துள்ளார். அப்போதுதான் அதன்படி குப்பன் வங்கி கணக்கை முடக்கி வைக்குமாறு தங்கள் அலுவலகத்தில் இருந்து எந்த கடிதமும் வங்கிக்கு அனுப்பவில்லை என்றும் மாவட்ட போலீஸ் அதிகாரி பெயரில் யாரோ அப்படி ஒரு கடிதம் தயாரித்து வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து குப்பனின் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கி வரவு செலவு செயல்பாட்டிற்கு கொண்டுவருமாறு முறையான கடிதம் ஒன்றை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வளவனூர் வங்கிக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இது தொடர்பாக வங்கிக் கிளை மேலாளர் அபிஷேக் குமார் போலீசில் புகார் அளித்ததன் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயரின் வங்கிக்கு கணக்கு மூலம் கடிதம் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அவர்கள் விசாரணையில் வங்கியில் எளிய முறையில் கடன் பெறும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூறுவதாக பல்வேறு நபர்களின் செல்போன் எண்ணை வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். அதோடு குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டால் வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அப்படி ஆலோசனை பெறுபவர்கள் பலர் முன்கூட்டியே வாட்ஸப்பில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகை பணம் செலுத்து வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பலர் வாட்ஸ்அப்பில் அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் கடன் பெறுவதற்கான வழிமுறை ஆலோசனைகளை முழுமையாக சொல்லாமல் மோசடி செய்துள்ளதாகவும் இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பது காலதாமதம் ஏற்பட்டதால் இதைத் தொடர்ந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சிலரான ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பாலிசி ஏஜென்ட் ராஜசேகர், கமுதக்குடி முன்னாள் ராணுவ வீரர் முருகன், தீயணைப்பு நிலைய உதவியாளர் சாந்தாராம் ஆகிய மூவரும் தங்கள் ஆலோசனைக்கு பணம் செலுத்திய அந்த வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பெயரில் போலியாக ஒரு கடிதம் தயாரித்து அதனை வளவனூரில் உள்ள அந்த வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாவட்ட கண்காணிப்பாளர் எழுதிய கடிதம் என்பதால் வங்கி மேலாளர் காவல்துறை அதிகாரி குறிப்பிட்ட அந்த வங்கிக் கணக்கை முடக்கி வைத்துள்ளார். ஆனால் அது குப்பன் கணக்கு என்பது பிறகு தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த மோசடியில் ஈடுபட்டது யார்? குப்பனின் வங்கி கணக்கில் எவ்வளவு பேர் ஆலோசனைக் கட்டணம் செலுத்தி உள்ளனர்? விசாரணையும் நடந்து வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயரில் போலி கடிதம் அனுப்பிய மேற்படி மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்பது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.