கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில், வாக்கெடுப்பிற்கு முன்பாகவே முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள அறிக்கை:
’’காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ராஜதந்திர மற்றும் மதிநுட்ப நடவடிக்கையாலும், உச்சநீதிமன்றத்தின் நியாயமான தலையீடு மற்றும் தீர்ப்பாலும் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் மத்திய அரசின் ஜனநாயக படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்திய ஜனநாயகத்தின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் நீதியும், ஜனநாயகமும் வென்றுள்ளது. உச்சநீதிமன்றம் தனித்தன்மையையும், பெருமையையும் காப்பாற்றி மக்களிடம் மீண்டும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.
பணத்திற்கும் பதவிகளுக்கும் பலியாகிவிடாமல் ஒற்றுமையாக இருந்து காங்கிரஸ் கட்சியின் புகழை காத்து கட்டுப்பாட்டோடு ஒன்றுபட்டு ஒற்றுமையாய் செயல்பட்ட கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டிற்கு உரியவர்கள். மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படும் ஆளுநர்களுக்கு சரியான பாடம்-படிப்பினை இது. ஜனநாயகமும், சட்டமும், தர்மமும் வென்றது மகிழ்ச்சிக்குரியது. தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.’’