தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் 15-வது இடம் தமிழகம். தமிழக அரசு சார்பில் தினசரி பதில் சொல்கின்ற அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதில் சொல்வாரா? என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 15 -ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து வசதிகள் இருந்தும் தமிழக அரசு சரியான அணுகுமுறையை கையாளாததே தொழில் முதலீடுகள் குறைவதற்கான முக்கிய காரணம். இதனால் தமிழகத்தை நோக்கி வந்த அனைத்து முதலீடுகளும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவை நோக்கி செல்ல தொடங்கியதை அனைவரும் அறிவோம்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பின்றி லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், புதிய முதலீடுகள் தமிழகத்திற்கு வரவில்லை என்றால் வருங்காலத்தில் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தொழில்கள் அனைத்தும் முற்றிலும் பாதிப்பை சந்தித்திருக்கிறது என்றும், புதிய தொழில்கள் தொடங்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்றும் தமிழக அரசை பலமுறை எச்சரித்தும் கண்டுக்கொள்ளாமல் செயல்பட்டதால் தமிழகம் பின்தங்கி நிற்கிறது. தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர் பின்னடைவை சந்திக்கிறது என்பதை இந்த பட்டியல் வெளிக்காட்டுகிறது.
2015 –ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல கோடிக்கணக்கான முதலீடுகளை தமிழகம் பெற்றதாக ஆட்சியாளர்கள் கூறியது அனைத்தும் பொய்யா ?. முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது தமிழகம், முதலீடுகள் சென்றது எங்கே ? என்ற கேள்விகள்தான் அனைவரிடத்திலும் மேலோங்கி நிற்கிறது.
தமிழக அரசும், தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக தொழிற்துறையின் மீது தனி கவனம் செலுத்தினால் மட்டுமே மீட்டெடுக்க முடியும். முதலில் தமிழகத்தில் உள்ள தொழில்களை பாதுகாத்து ஏற்கனவே செய்து வரும் தொழில்களை விரிவுப்படுத்த முன்வருபவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு செல்லும் முதலீடுகளை தடுக்க முடியும். தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வராமல் போனதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை களையாமல் தமிழகம் முன்னேற முடியாது.
மத்திய அரசின் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் 15 –வது இடத்தில் தமிழகம் இருப்பதால் அடுத்த ஆண்டு நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஆக்கப்பூர்வமாக நடத்த வேண்டிய அவசியமும், கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாநாடு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியதாக இருக்கும்.
தமிழக இளைஞர்களின் வாழ்க்கையில் தமிழக அரசு மெத்தனம் காட்டினால் வருகின்ற காலங்களில் வடமாநிலங்களை போல குற்றச்செயல்கள் பெருகி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும். தமிழக அரசு சார்பில் தினந்தோறும் பதில் கூறும் அமைச்சர் ஜெயக்குமார் தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தொடர் சரிவை சந்திப்பதற்கான காரணங்களை மக்களுக்கு சொல்லியாக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.