அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80), உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (05.08.2021) காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட மதுசூதனன், சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறியிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக கட்சி வேலைகளிலிருந்து ஓய்வுபெற்று தண்டையார்பேட்டையில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மதுசூதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று அவர் காலமானார். அவரது மறைவு அதிமுகவிற்குப் பெரும் இழப்பு என அதிமுகவினர் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் இரங்கல்கள் வெளியிடப்பட்டுவருகிறது. சென்னை தண்டையார்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்குத் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக சார்பில் மதுசூதனன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மதுசூதனனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர். அஞ்சலிக்குப் பிறகு மதுசூதனின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.