தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டப் பகலில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் - முத்துக்குமார் என்பவர்களுக்கு இடையே கொலை வழக்கு தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முத்துக்குமாரின் தம்பி சிவகுமார் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று பிற்பகல் வழக்கறிஞரான முத்துக்குமார் நீதிமன்றத்தில் தனது பணியை முடித்துக் கொண்டு காரில் தூத்துக்குடி ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள சோனிஸ்வரத்தில் உள்ள நகை அடகு கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞர் முத்துக்குமாரை காரிலிருந்து கீழே இறக்கி ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
பட்டப் பகலில் வழக்கறிஞர் ஒருவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணை மேற்கொண்டதோடு, குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.