கன்னிவாடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 கோடியே 90 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். “2011ம் வருடம் கட்ட வேண்டிய பேருந்துநிலையப் பணிகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டன. திமுக ஆட்சி அமைந்தவுடன் 200 நாட்களில் பணிகள் துவக்கப்பட்டது” என ஐபெரியசாமி பெருமிதமாகக் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடி பேரூராட்சியில் முறையான பேருந்துநிலைய வசதி இல்லாததால் பேருந்துகள் நிற்காமல் சென்று கொண்டிருந்தன. இது தவிர சாலையில் பேருந்துகளை நிறுத்தும்போது போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டுவந்தது. இதைப் பற்றி ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் பேருந்துநிலைய வசதி வேண்டி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 90 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார். புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கன்னிவாடியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது; “கடந்த 2011ம் வருடம் திமுக ஆட்சியின்போது பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.1.5 கோடி மதிபில் பேருந்து நிலையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் 200 நாட்களுக்குள் கன்னிவாடியில் புதிய பேருந்து நிலையம் 6 கோடி மதிப்பில் அமைக்க இன்று பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இது போல, சீவல்சரகு பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் துவங்கப்பட உள்ளது. 50 வருடங்களாக சின்னாளப்பட்டியில் உள்ள சாயப்பட்டறை தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆத்துப்பட்டியில் பாலம் மற்றும் தடுப்பணை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது. தொடர்ந்து ஆத்தூர் தொகுதி மக்களின் அனைத்து குறைகளும் கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படும். இங்கு கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு நுழைவு வாயில்கள், இரண்டு உணவகங்கள், தரைத்தளம் மற்றும மேல்தள வசதியுடன் வணிக வளாகம், மழைநீர் சேகரிப்பு உட்பட அனைத்து கட்டமமைப்பு வசதிகளும் சிறப்பாக அமைய உள்ளது. அதுபோல், இந்த கன்னிவாடி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கும், பெங்களுருக்கும் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும். விரைவில் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.