கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பா.கிள்ளனூர் ஊரைச் சேர்ந்தவர் பாபு என்கிற ஏழுமலை(29). இவருக்கு திருமணமாகி மனைவியும் மூன்று வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் காலை ஏழுமலை மனைவி, அவரது வீட்டின் பின்புற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் இறந்த நிலையில் சடலமாக தொங்கியுள்ளார்.
தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களின் விசாரணையில், இறந்த பெண்ணின் கணவர் ஏழுமலைக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவரின் மனைவிக்கும் இடையில் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்த தகவல் ஏழுமலையின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 4ம் தேதி இரவு ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனைவியை ஏழுமலை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு பதட்டம் அடைந்த ஏழுமலை, தனது அக்காவின் கணவர் ரவி கார்த்திக்கை அழைத்து வந்து இருவரும் சேர்ந்து மயக்கத்தில் இருந்த பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர், ராஜீவ் காந்தி மற்றும் அவரது மனைவி ஆகியோரை வரவழைத்து அவர்கள் உதவியுடன் நான்கு பேரும் சேர்ந்து அப்பெண்ணை வீட்டுக்கு பின்புறம் இருந்த மரத்தில் தூக்கு மாட்டிதொங்க விட்டுள்ளனர். அதன் பிறகு மனைவி தற்கொலை செய்து கொண்டதாக ஏழுமலை நாடகமாடியுள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஏழுமலை, ராஜீவ்காந்தி, ராஜீவ் காந்தியின் மனைவி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரவி கார்த்திகை தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர்.