Skip to main content

வீட்டு சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
வீட்டு சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த கொன்றைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் ஜெகநாதன் (வயது 57). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பொண்ணு. ஜெகநாதன் தம்பதிக்கு சுப்பிரமணியன், சுரேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

ஜெகநாதன் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு படுத்து உறங்கி உள்ளார். இப்பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஜெகநாதன் வசித்து வந்த மண்ணால்  கட்டப்பட்ட குடிசை வீட்டின் சுவர் சனிக்கிழமை அதிகாலை சுமார்  5 மணி வாக்கில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மண்சுவரால் மூடப்பட்ட தொழிலாளி ஜெகநாதன் மூச்சுத்திணறி பலியானார்.



இதையடுத்து உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் காவல்துறை மற்றும் வருவாய்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் பாஸ்கரன், தலைமை இடத்து கூடுதல் துணை வட்டாட்சியர் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் தர்ஷனா, கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன், உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, அதிமுக ஒன்றியச்செயலாளர் உ.துரைமாணிக்கம்  ஆகியோர் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. 

சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்த கூலித்தொழிலாளி ஜெகநாதன் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருடைய குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்