கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாகப்போகிறது என்கிற செய்தி சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இது நடந்தால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என குதுகலமாக கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
புகழ்பெற்ற கோயில்களும், மிகப்பழமையான பாரம்பரியமும், வரலாற்றுப்பின்னணியும், விவசாயத்தையும், ஒருங்கே இயற்கையாக பெற்றுள்ள கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உறுவாக்கித்தரவேண்டும் என 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. வர்த்தகர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் பலமுறை ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர். கும்பகோணம் எம்,எல்,ஏ அன்பழகன் சட்டமன்றத்தில் இதுகுறித்து கோரிக்கை வைத்தே வருகிறார்.
இந்த நிலையில் தனி மாவட்ட செய்தி உண்மையா, மாவட்ட அதிகாரிகள், அதிமுக பிரமுகர்கள் பலரிடமும் விசாரித்தோம், " கும்பகோணம் தனி மாவட்டமாகக்கூடிய அனைத்து தகுதிகளும் கொண்டுள்ளது. தலைநகரங்களில் இருக்கக்கூடிய அனைத்து தகுதிகளும், கும்பகோணத்தில் இருக்கிறது. தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம், தலைமை மருத்துவமனை, சிட்டி யூனியன் வங்கியின் தலைமை அலுவலகம், மாவட்ட கல்வித்துறை அலுவலகம், என அனைத்தும் கும்பகோணத்தில் இருக்கிறது.
1866 முதல் நகராட்சி அந்தஸ்து பெற்று சிறப்பு நகராட்சியாக இன்றுவரை செயல்பட்டு வருகிறது. அதேபோல் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் இங்கிருந்து நாகை மாவட்டம் வரை தன்னுடைய சேவையை செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள எட்டு போக்குவரத்து கோட்டங்களில் ஒன்று கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்ட தலைமை அலுவலகமும் கும்பகோணத்தில் தான் உள்ளது. மாவட்ட தலைமையகத்துக்கு தேவையான பதிவாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அனைத்தும் கும்பகோணத்தில் இருக்கிறது.பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், வலங்கைமான் நீடாமங்கலம், ஆகிய வட்டங்களை இனைத்து தனிமாவட்டமாக்கினால் பெறும் பயன் உள்ளதாக அமையும்" . என்கிறார்கள்.
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பிலனர் க.அன்பழகனோ, " தனிமாவட்டம் என்கிற சாத்தியம் தற்போது இருப்பதாக தெரியவில்லை, அதற்கான முகாந்திரம் தற்போது தெரியவில்லை," என்கிறார்.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் கும்பகோணம் பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.