கடும் மழைப்பொழிவால் பெரும் பொருளாதார இழப்பையும், மனித இழப்பையும் சந்தித்து வருகிறது கேரளா மாநிலம். கேரளா முதல்வர் பினராயிவிஜயன் ஆகஸ்ட் 17ந்தேதி அறிவிப்பின்படி, 167 பேர் இறந்துள்ளார்கள் என அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 19ந்தேதி வரை மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கேரளா மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர்.
கேரளா மக்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வேலை செய்பவர்கள், வயதானவர்கள் மட்டுமே சொந்த ஊரில் உள்ள வீடுகளில் இருப்பார்கள். இதனால் இந்தியாவுக்கு வெளியேவும், கேரளாவுக்கு வெளியேவும் உள்ள மலையாளிகள் தங்களது பெற்றோர்களுக்கு, உறவினர்களுக்கு என்னவானதோ எனத்தெரியாமல் பெரும் கவலையில் சிக்கியுள்ளனர்.
மழையால் வீடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க கேரளா அரசு தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டது. பேரிடர் மீட்பு பணி வீரர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். பாதைகள் துண்டிப்பு, மண்சரிவு, மரங்கள் விழுந்தது, வீடுகள் மூழ்கும் அளவுக்கு மழை நீர் தேக்கம் போன்றவற்றால் மீட்பு பணியில் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய மோடியரசு வெறும் 100 கோடி ரூபாயை மட்டும் கேரளாவுக்கு வழங்கியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடவுளின் தேசமான கேரளாவுக்கு உதவுங்கள் என சமூக வளைத்தளங்களில் கேரளா மாநில முதல்வரின் வங்கி கணக்கை எண்ணை பகிர்ந்துள்ளனர்.
தமிழகரசு, தமிழக நடிகர்கள் உதவித்தொகை அறிவித்துள்ளனர். பக்கத்து மாநிலமான கேரளாவுக்கு தேவையான உணவுப்பொருள், நிதியுதவியை பொதுமக்களும், அமைப்புகளும் வழங்க துவங்கியுள்ளனர். அதன்படி விஐடி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் சார்பில் வேந்தர் விஸ்வநாதன், துணை வேந்தர்கள் சங்கர், செல்வம் போன்றோர் கேரளாவுக்கு நேரடியாக சென்று கேரளா முதல்வர் பினராயிவிஜயனை சந்தித்து ஒருக்கோடிக்கான காசோலையை வழங்கிவிட்டு வந்துள்ளார்கள்.
இதேப்போல் பிற சமூக அமைப்புகளும், தனிமனிதர்களும் கேரளாவுக்கு தங்கள் முடிந்த நிதியுதவி மற்றும் உணவுப்பொருள் உதவியை வழங்கிவருகின்றனர்.