தமிழ்நாட்டின் 17-வது வனவிலங்கு சரணாலயமாக காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை அறிவித்து அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம் என்ற புதிய சரணாலயம் சுமார் 478 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி, உரிகம் மற்றும் ஜவலகிரி சரகங்களின் வன நிலங்களை உள்ளடக்கி அமைக்கப்படும் என வனத்துறை மீதான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.
இதற்கான பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை தமிழ்நாட்டின் 17-வது வனவிலங்கு சரணாலயமாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதை அறிவிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பசுமை தமிழ்நாடு திட்டத்துக்கான இலக்குகளை அடைவதில் இந்த அறிவிப்பு சிறப்பான பங்கு வகிப்பதுடன், மாநிலத்தின் வளமான பல்லுயிர் தன்மையைப் பாதுகாப்பதில் இந்த முடிவு முக்கியப் பங்கு வகிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.