மயானத்திற்கு பாதையின்றி பல ஆண்டுகளாக துயரத்தை அனுபவித்து வருகிறோம். இறந்த பிறகாவது நிம்மதியாக எடுத்துச் செல்ல வழிவகை செய்யுங்கள் என அரசுக்கு ஒரு கிராமமே கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காசாங்குளம் கிராமத்தில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி முதலான எந்தவொரு அத்தியாவசிய அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் கோரையாற்றில் இருந்த சிறிய பாலத்தின் வழியாக மயானத்திற்கு சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது அந்த பாலத்தை அகற்றிவிட்டு, பல மீட்டர் உயரத்திற்கு மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளதால், இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல கோரையாற்றை கடக்கும் கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் காசான்குளத்தில சாமிநாதன் என்பவர் உயிரிழக்க, அவரது சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல அந்த கிராம மக்கள் கோரையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் இறங்கி சடலத்தை தலைக்கு மேல் தூக்கியபடி ஆற்றை கடந்துள்ளனர். ஆற்றை கடந்து செல்ல முடியாத உயிரழந்தவரின் வயதான உறவினர்கள், உடல் ஊனமுற்றவர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலைக்கு ஆளாகினர்.
"இருந்தாலும் கஷ்டம். இறந்தாலும் கஷ்டம் என்கிற நிலையிலேயே நாங்கள் வாழுகிறோம்" என்று கலங்கும் அந்த கிராம மக்கள், வாழும்போதுதான் அடிப்படை வசதிகூட இல்லாமல் ஆதரவற்ற மக்களாக, கடைக் கோடியில் வாழுகிறோம். சாகும்போதாவது நிம்மதியாக போய்ச் சேரவேண்டும் என்கிற எங்களின் மனக் கஷ்டத்தை அரசு உணர்ந்து உடனடியாக சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்துத் தர வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.