கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சி லட்சுமனம்பட்டி, மேலப்பாளையம் ஊராட்சி, வடக்குபாளையம் ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சுகாதார பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது; “தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சுகாதார பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, ஆக்சிஜன் அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக நோய் கண்டு அறியப்படுபவர்கள் அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நோய்களின் தன்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு தீர்வும் காணப்படுகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் 1,08,454 நபர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் 79,877 நபர்களும், இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் 53,594 நபர்களும், இயன்முறை சிகிச்சை உள்ளவர்கள் 7,769 நபர்களும், ஆதரவு சிகிச்சை உள்ளவர்கள் 5,868 நபர்களும் பயன்பெற்று வருகிறார்கள். இப்பணிக்கு 101 இடைநிலை சுகாதார பணியாளர்களும், 194 பெண்சுகாதார பணியாளர்களும், 25 செவிலியர்களும் என மொத்தம் 320 பணியாளர்கள் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.
பின்னர் வடக்குபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய் சேய் மரணங்களை தடுப்பதற்காக பெண்கள் கர்ப்பம் அடைந்தவுடன் துணை சுகாதார நிலையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு அவர்களின் குழந்தை வளர்ச்சி மற்றும் தாயின் ஆரோக்கியம் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல், தைராய்டு, சத்துக் குறைபாடு, ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள கர்ப்பிணி பெண்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.