முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்திக் சிதம்பரம், சனிக்கிழமை இரவு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். பின்னர் குடும்பத்தினருடன் சித்சபையில் சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து பிரகாரத்தில் இருந்த கோவிந்தராஜ பெருமாள் உள்ளிட்ட அனைத்து சாமிகளையும் வழிபட்டார்.
பின்னர் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டியில் உள்ள பெரிய விநாயகரை போல தெற்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள முக்குறுணி விநாயகர் கோவிலுக்குச் சென்று திருஷ்டியை கழிக்கும் விதமாக 16 தேங்காய்களை உடைத்து விநாயகரை வணங்கினார். அப்போது காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் எங்கு உள்ளது என்று தேடினார். அப்போது தீட்சிதர்கள் இங்கு உண்டியல் வைப்பதில்லை என்றனர். இதனைத்தொடர்ந்து தீட்சிதர்களின் தட்டில் காணிக்கையை வைத்தார். பின்னர் அவர் சீர்காழி காரைக்கால் வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு சென்றார்.
மத்திய அரசின் தொடர் நெருக்கடி காரணமாகவும் பல்வேறு வழக்குகளில் சிக்கிக் உள்ளதாகவும், அதிலிருந்து விடுபட ப. சிதம்பரத்தின் குடும்பத்தினர் தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து முக்குறுணி விநாயகர் ஆலயத்தில் வழக்குகளில் இருந்து விடுதலை பெறவும், குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியை கழிக்க தேங்காய் உடைத்து வழிபட்டார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.