கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ வில்சன், கடந்த ஜனவரி மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தவுபிக் (28), அப்துல் சமீம் (32) ஆகிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடவி செய்ததாக இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
![kanyakumari si wilson incident salem prison](http://image.nakkheeran.in/cdn/farfuture/zfO3oDTsHTLZSgmeQQOx7YPzcUX3YjmkPZtpLGzpT2k/1581904120/sites/default/files/inline-images/wilaon4.jpg)
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்துவிட்டு மீண்டும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கு என்ஐஏ பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் 'உபா' சட்டமும் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தீவிரவாதிகள் இருவரும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (பிப். 15) காலை, பாளையங்கோட்டை சிறையில் இருந்து அவ்விரு தீவிரவாதிகளையும் பலத்த பாதுகாப்புடன் வெளியே கொண்டு வந்த காவல்துறையினர், வரும் வழியில் திடீரென்று மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சேலம் மத்திய சிறையில் கொண்டு வந்து அடைத்தனர்.
இதுகுறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் வலுத்துள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இரு தீவிரவாதிகளையும் மதுரை மத்திய சிறையில் சில மணி நேரங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்,'' என்றனர்.