மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் அமைப்பான ரோட்ட ராக்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவ்விழாவில் அவர் பேசியபோது, ‘’நான் வித்தியாசமான, வினோதமான அரசியல் வாதி. நான் ஒரு திறந்த புத்தகம். அரசியலில் எதுவும் சரியில்லை. அதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே நீங்கள் அரசியலுக்குள் வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அரசியல் நம் வாழ்க்கையின் ஒரு அங்கம். தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன்.
அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லை என்று சொல்வதை ஏற்க மாட்டேன். மாணவர்களைப்போல நாட்டில் அனைவருக்கும் அரசியல் தேவை. சாதி பெருமை பேசக் கூடாது என எனக்கு வீட்டில் கற்றுக் கொடுத்தார்கள். அதற்காக பெருமைப்படுகிறேன். சாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தாலே கலவரம் குறையும்.
உங்கள் முகத்தினை பார்க்கும் போது நல்லவர்கள் தலைவராக தெரியாவிட்டால் கெட்டவர்கள் தலைவராக தெரிவார்கள். சமூக வலைதளங்களில் நீங்கள் குரல் கொடுப்பதே அரசியல்தான். நேரத்தை வீணடிப்பதற்கு பதில் வாக்குச்சாவடி செல்லுங்கள். வாக்களியுங்கள். அரசியலில் என்னையும், என்னுடைய நேரத்தையும் முதலீடு செய்துள்ளேன்’’என்று தெரிவித்தார்.