Skip to main content

திராவிடம் என்பது 2 கட்சிக்கும், 3 குடும்பத்திற்கும் சம்பந்தப்பட்டதல்ல... -கமல்ஹாசன்

Published on 28/01/2019 | Edited on 28/01/2019
kamalhaasan 1

 

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


கடந்த 40 ஆண்டு கால தமிழக அரசியலில் ரௌடிகள் ஆதிக்கமே உள்ளது. தூய்மையான அரசியலை எல்லோரும் சேர்ந்துதான் ஏற்படுத்த முடியும். திராவிடம் என்பது 2 கட்சிக்கும், 3 குடும்பத்திற்கும் சம்பந்தப்பட்டதல்ல. அது ஒரு தேசியம் சார்ந்தது. வட மாநிலங்களிலும் திராவிடர்கள் வாழ்கிறார்கள்.


மக்களை நான் சந்தித்து வரும் நிலையில், அவர்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. எங்களை (மக்கள் நீதி மய்யம்) வெளியிலிருந்து யாரும் இயக்கவில்லை. நாங்களே இயங்குகிறோம்.   மக்களுக்கு தற்போது உள்ள நிலைப்பாட்டில் தவறு செய்தவர்களை அடையாளம் காட்டினாலும் தெரியவில்லை, புரியவில்லை. சிறைக்கு  போனவர்கள் குறித்து பேசினாலும் சொன்னாலும் புரியவில்லை.


பிரதமருக்கு எதிராக ‘கோ பேக்’, ‘கறுப்புக்கொடி’ பிரச்சனைகள் அனைத்தும் சாதாரண விஷயம்தான். அரசியலில் இதெல்லாம் நிகழும். தமிழகத்தில் கறுப்புக்கொடி காண்பித்தது ஏன் என்பதை பிரதமர் மோடி கவனிக்க வேண்டும். அதை கவனிக்க வேண்டியது எனது பொறுப்பல்ல, மோடியின் பொறுப்பு” என்றார். மேலும் அவரிடம் செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேட்டதற்கு, “தேர்தல் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறேன்” என்று கூறினார்.
                                                                      

இதனிடையே தொண்டை பிரச்சனை காரணமாக அரசு பணியாளர் சங்க மாநாட்டில் கமல்ஹாசன் பங்கேற்காததால் மாநாட்டிற்கு வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.  கமல்ஹாசனின் 2 நாள் சுற்றுபயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று இரவு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க 6-வது மாநில மாநாட்டில் கமல்ஹாசன் பங்கேற்று பேசுவார் என்று அறிவிக்கபட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டன. கமல்ஹாசன் பேச்சைக் கேட்க ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். 
 

இந்த நிலையில் தொண்டை பிரச்சனை காரணமாக கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என்று மேடையில் அறிவிக்கபட்டது. அதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உடனே அங்கிருந்து சாரை, சாரையாக புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் நன்றியுரையுடன் முடிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்