கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து வேல்முருகன் லதா என்ற பெண்ணை, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், லதாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் இடையே முறையற்ற நட்பு இருந்து வந்துள்ளது. இதனால், இரு குடும்பத்திலும் கடந்த பல மாதங்களாக அடிக்கடி சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஏ.குமாரமங்கலம் அய்யனார் கோவில் பின்புறமுள்ள சிறுபாக்கம் ஏரிப் பகுதியில் இருந்து லதாவின் வாயில் நுரை தள்ளிய நிலையில், இருசக்கர வாகனத்தில் லதாவை கொண்டு வந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏழுமலை சேர்த்துள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அறிந்த ஏழுமலை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தச் சம்பவம் லதாவின் உறவினர்களுக்குத் தெரிய வந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை காவல்நிலை சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மா, சப் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற சிறுபாக்கம் ஏரிப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு லதாவின் செருப்பு, மதுபாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், விஷ மருந்து ஆகியவை கிடந்துள்ளன. அதைச் சேகரித்து எடுத்துக் கொண்டனர் போலீசார். லதாவின் மரணம் குறித்து அவரது கணவர் வேல்முருகன் உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இருவரின் உறவு பற்றி இரு குடும்பத்திற்கும் தெரியவந்ததால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இருவரும் நிம்மதியாக வாழ முடியாது. எனவே இருவரும் தற்கொலை செய்து கொள்ளவது என முடிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று இரவு சிறுபாக்கம் ஏரிப் பகுதிக்கு லதாவை ஏழுமலை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் விஷமருந்தி சாவது என்று முடிவு செய்துள்ளனர். குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து ஏழுமலை அதை முதலில் லதாவுக்கு கொடுத்து குடிக்குமாறு கூறியுள்ளார். அவரின் வார்த்தையை நம்பி விஷத்தைப் குடித்துள்ளார் லதா. சிறிது நேரத்தில் உயிருக்குப் போராடியுள்ளார்.
ஏழுமலை தானும் விஷம் குடிப்பதாக லதாவை நம்பவைத்துள்ளார். ஆனால், ஏழுமலை விஷத்தைக் குடிக்கவில்லை. வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்குப் போராடிய லதாவை டூவீலரில் வைத்துக் கொண்டுவந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் தலைமறைவாகி விட்டதாக ஏழுமலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் ஏழுமலையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.