கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் தனது மனைவிக்கு ஆடியோவில் பேசி வாட்ஸ்ஆப்பில் தகவலை அனுப்பி விட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த ஆடியோவில் ரமேஷ் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து ரமேஷின் அண்ணன் செந்தாமரைக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரமேஷ் ஆடியோவில் பேசியதில், "23 லட்சம் பணம், 13 சவரன் நகை ஆகியவற்றை அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளேன். அவருக்காகத்தான் கடன் வாங்கினேன். ஆனால், தற்போது அவர் என்னை மிரட்டுகிறார். அவரால் நமது பிள்ளைகளுக்கு ஆபத்து. பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். எனக்கு இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை" என்று பேசியிருந்தார்.
இந்த ஆடியோ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேஷின் மளிகை கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக அவரது மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், தன் கடையில் வேலை செய்த கவிதாவுடன் ரமேஷ் பழகி வந்துள்ளார். மேலும், இந்த பழக்கத்தால் ரமேஷ் கவிதாவுக்கு 23 லட்ச ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். இது மட்டுமின்றி, தனது மனைவியின் 13 பவுன் நகையையும் கவிதாவுக்கு கொடுத்துள்ளார். இதன் காரணமாக கவிதாவும் ரமேஷும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். மேலும், ரமேஷ் தனது குடும்பத்தை மறந்து கவிதாவுக்காக தனது பணத்தை செலவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கவிதா வேறொரு ஆண்நண்பருடன் நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரமேஷை புறக்கணித்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கவிதாவை சந்தித்துக் கேட்டுள்ளார். அப்போது கவிதா ரமேஷை மிரட்டி உள்ளார். இதனால், தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளைத் திருப்பிக் கொடுக்குமாறு ரமேஷ் கேட்ட போது, "பணம் மற்றும் நகைகளைத் தர முடியாது. மீறி பணம் கேட்டால் உன் குடும்பத்தினரும் பிள்ளைகளும் பல விபரீதங்களைச் சந்திக்க நேரிடும்" என்று மிரட்டி உள்ளார். இதன் பிறகு ரமேஷ் தனக்கு கவிதா துரோகம் செய்ததாகக் கருதி, கொடுத்த பணமும் நகையும் போச்சு... கவிதாவும் துரோகம் செய்வதோடு மட்டுமல்லாமல் மிரட்டுகிறார். அவரிடம் பணம் உள்ளதால் எதையும் செய்வார். எனவே, தனது மனைவி, பிள்ளைகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்த கவிதா ரமேஷை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.