கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் பொறுப்பேற்ற பிறகு, தொடர்ந்து மாவட்டம் முழுக்க ஆய்வுப் பணியை செய்துவந்தார். இந்நிலையில் குளித்தலை பகுதியிலுளள ஒரு அரசுப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது 1959 ஆம் ஆண்டில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நேரடியாக அவர் வந்து ஆய்வு செய்து அந்தப் பள்ளியின் பதிவேட்டில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அதை கண்டுபிடித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மிகவும் நெகிழ்ந்து அந்தப் பதிவை வாட்ஸ்அப் மற்றும் செய்தியாளர்களிடம் இதை பகிர்ந்துள்ளார்.
தமிழக வரலாற்றில் நீதிக்கட்சி தொடங்கி அடுத்து திராவிட இயக்கம் என திமுக தேர்தல் பயணத்தை தொடங்கும் போது 1959இல் கலைஞர் கருணாநிதி முதல்முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்ற நிலையில், ஒரு பள்ளியில் ஆய்வு செய்தபோது எழுதிய குறிப்பு மிகவும் அரிதாக கிடைத்துள்ளதை மாவட்ட ஆட்சியர் இந்த பதிவின் மூலமாக தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நாம் கேட்டபோது, "எனக்கு மிகப்பெரிய நல்வாய்ப்பாக இந்த செய்தியை காணமுடிந்தது. அதேசமயம் சமூக நீதிக்காக சமத்துவத்திற்காக தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் பணியாற்றி இந்த சமூகத்தை உயர்த்துவதற்காக அவர்கள் பாடுபட்டதை எண்ணி நான் பெருமையாக கருதுகிறேன். கலைஞர் இந்த தொகுதியில் வெற்றிபெற்று அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை நான் பார்வையிட்டது என் வாழ்நாள் மகிழ்ச்சி. கலைஞர் எப்படி சமூக நீதிக்காக தன்னை அர்ப்பணித்தாரோ அதேபோல் நான் உறுதியாக மக்களுக்காக பணியாற்றுவேன்" என கூறினார்.
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரின் திறமையை அவருக்கு வருகிற கோரிக்கையின் அடிப்படையில் அவரின் செயல்பாடுகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த சமூகத்தினுடைய பின்புலம் அதனுடைய வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எல்லாவற்றையும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் கவனித்து ஒரு பாடமாக கொடுத்திருப்பது மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.