தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான நேற்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். அதே சமயம் இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்திருந்தன. அதில் தகுதியானவர்கள் என அரசு 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்தது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் ஏற்கப்படாத மகளிருக்கு, தமிழக அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், இ - சேவை மையங்கள் வழியாக வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். அதன்படி மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தவர்கள் இ - சேவை மையங்கள் மூலம் நாளை மறுநாள் (செப்டம்பர் 18) முதல் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ததில் இருந்து 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியான ஆவணங்கள் மற்றும் தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும்.
நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் நாளை மறுநாள் (செப்டம்பர் 18) முதல் பயனாளிகளின் தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக 56.6 லட்சம் மகளிருக்கு அனுப்பப்படும். குறுஞ்செய்தி மூலம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களை நேரில் அணுகி நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.