கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.