மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பகத்தின் உரிமையாளரும், மூத்த பத்திரிகையாளருமான வி. அன்பழகன் இன்று (12.01.2020) காலை கைது செய்யப்பட்டார்.
இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். சென்னை புத்தகக் காட்சியில் அவரது பதிப்பகத்தின் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் ஊழல்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நூல்களாக வெளிட்டு வருகிறார் வி.அன்பழகன்.
நேற்றைய தினம் (11-01-2020) மக்கள் செய்தி மைய அரங்கை மூடச்சொல்லி புத்தக காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்கள் மக்கள் செய்தி மைய அரங்கில் விற்கப்படுவதே காரணம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த காரணத்தை எழுத்துப் பூர்வமாக கேட்டிருக்கிறார் அன்பழகன். கடிதமாக கொடுத்தவுடன் நேற்றைய தினமேஅரங்கை காலி செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பபாசியினருக்கு பத்திரிகையாளர் அன்பழகன் கொலை மிரட்டல் விடுத்ததாக பபாசி நிர்வாகிகள் மூலமாகப் பொய் புகார் ஒன்றைப் பெற்றுள்ளது சென்னை மாநகர காவல்துறை.
இப்படிப் பெறப்பட்ட புகாரில் ஜாமினில் வரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறை இன்று (12-01-2020) அதிகாலை ஐந்து மணியளவில் அன்பழகனை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்திருக்கிறது. இந்த வழக்கும், கைது சம்பவமும் அப்பட்டமான அத்துமீறல்- தமிழக அரசின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்வது கருத்து சுதந்திரத்திற்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் விடப்பட்ட சவால். கருத்து சுதந்திரம் மீது நம்பிக்கை கொண்டோர் அனைவரும் கண்டிக்க வேண்டியது அவசியம் .
மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் கைதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. ஆட்சியாளர்கள் இட்ட பணியை நிறைவேற்ற பொய் வழக்கு போட்ட காவல்துறை, புத்தகக்காட்சி அமைப்பாளர்களை செனனை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர் அன்பழகன் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. இவ்வாறு பாரதிதமிழன் தெரிவித்துள்ளார்.