கரூரில் லைட்ஹவுஸ் ரவுண்டானா அகலத்தைக் குறைக்க காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த காந்தி சிலை அகற்றப்பட்டது. இந்நிலையில் பனியன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திடீரென ரவுண்டானாவில் புதிய காந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தரமற்ற பீடத்தின் மீது காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், முதல்வர் திறந்து வைப்பதற்காகத்தான் அவசர கதியில் தரமற்ற பீடத்தின் மீது சிலை வைக்கப்பட்டுள்ளது எனவும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு காந்தி சிலை தரமற்ற பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதாகக் கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் குண்டுக்கட்டாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடைசி நேரக் கொள்ளைக்காக கரூரில் 70 ஆண்டுகால மகாத்மா காந்தி சிலையை அகற்றி, புதுச்சிலை என்னும் தரமற்ற கட்டுமானத்தைத் தட்டிக் கேட்ட மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை பெண் என்றும் பாராது காவல்துறை தவறான முறையில் கைது செய்திருக்கிறது. மக்கள் விரைவில் தீர்ப்பளிப்பர்!" என்று குறிப்பிட்டுள்ளார்.