Skip to main content

காஞ்சி ஜெயேந்திரர் மறைவு - மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

Published on 28/02/2018 | Edited on 28/02/2018
jeyendrarer


காஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தன் டிவிட்டர் பதிவில் கூறியதாவது, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவால் வேதனை அடைந்தேன். ஜெயேந்திரரின் முன்மாதிரியான சேவை, நல்ல எண்ணங்களால் லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில் கூறியதாவது, காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் துயரம் அடைந்தேன். ஜெயேந்திரரின் போதனைகள் அவருடைய லட்சக்கணக்கான பக்தர்களால் மதிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக் குறைவால் திடீரென்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், அவரை இழந்து வாடும் அவருடைய  விசுவாசிகள் அனைவருக்கும் காஞ்சி சங்கரமடப் பணியாளர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இச்செய்தி கேட்டு வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். மடாதிபதியாக இருந்தாலும் மக்களுடன் நன்கு பழகியவர். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் 83 வயதில் திடீர்ரென மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி கேட்டு மனவருத்தம் அடைந்தேன். 69வது காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்துள்ளார். நான் அவரை நேரில் பலமுறை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது. அவரை பிரிந்துவாடும் காஞ்சி மடத்தின் நிர்வாகிகளுக்கும், அவரை அன்றாடம் சந்தித்து ஆசிபெறும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அவர் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காஞ்சி சங்கர மடத்தின் 69 ஆவது மடாதிபதி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவும், இந்து மதத்தின் கொள்கை கோட்பாடுகளை காக்கவும், பரப்பவும் தொடர்ந்து தொய்வின்றி பாடுபட்டு வந்தவர் ஜெயேந்திரர். அவரது மறைவு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். அவர்களது மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்