சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் கீரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் வீரமணி, திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கீரப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது கிராம ஊராட்சியில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கிராம சபை கூட்டத்தில் பேசிய கே.எஸ். அழகிரி
தமிழ்நாடு அரசு ஊராட்சிகள் விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார். அவரைப் போன்ற உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இருக்குமேயானால் கிராமத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரலாம்'' என்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மின்வெட்டு இருப்பது உண்மைதான். அதற்கான விளக்கத்தை முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் சொல்லி இருக்கிறார்கள். நம்முடைய அனல் மின் நிலையங்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து நிலக்கரி வருவது குறைந்து விட்டது. பாஜக அரசு இதை முறையாகச் செய்திருந்தால் தட்டுப்பாடு வராது. அதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.15 தினங்களுக்கு முன்பு கூட நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்தக் கவனம் செலுத்த வேண்டும் என ராகுல்காந்தி சொல்லி இருக்கிறார். மோடி அதைச் சட்டை செய்யவில்லை.
வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை மாநில அரசுகளே இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிற திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறார்கள். அது நடைமுறைக்கு சாத்தியமில்லை. எரிவாயு, பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி 250 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் இதை உயர்த்தியவர் மோடிதான். ஆனால் மாநில அரசு சிறிய அளவில் உயர்த்தினால் நீங்கள் தான் பொறுப்பு எனக் கூறுவது ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்தார். கடந்த 7 ஆண்டுகளில் 27 லட்சம் கோடி பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதித்து அவர்கள் வசூலித்து இருக்கிறார்கள். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் பார்த்துக் கொண்டார். ஏனென்றால் அவருக்குப் பொருளாதாரம் தெரியும். டீசல் விலை ஏறினால் விலைவாசி உயரும் என்பதும் அவருக்குத் தெரியும். ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்திற்கு வந்தால் அந்த மாநில அரசாங்கத்தினுடைய உணர்வுகள், அந்த மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை விட அதிக அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும் என நினைத்து செயல்பட்டால் தோல்வியில்தான் முடியும்'' என்றார்.