திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் இணைந்து தமிழகத்தில் முதன்முறையாக நடத்திய கிராம அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கொத்தப்புள்ளி ஊராட்சியில் நடைபெற்றது.
10 வயதிற்கு மேல் வயது வரம்பில்லாமல் அனைவரும் கலந்து கொள்ளும் இந்த மினி மாரத்தான் போட்டி கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புபட்டியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் தொடங்கியது. போட்டியை ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அன்பரசு, செந்தில் கிரசர் உரிமையாளர் அன்பரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தோப்புபட்டியில் இருந்து புறப்பட்டு தோப்புபட்டி ரயில்வேகேட், வழியாக தோப்புபட்டி மேற்கு காலனி, கொத்தப்புள்ளி, ரெட்டியார்சத்திரம் ரயில்வேகேட், தாதன்கோட்டை, பொம்மனங்கோட்டை வழியாக வந்து நிறைவாக கதிரனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மைதானத்தை வந்தடைந்தனர்.
சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கொத்தப்புள்ளி ஊராட்சியில் பல்துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா கதிரனம்பட்டியில் நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அன்பரசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரெங்கசாமி வரவேற்று பேசினார். சி.பி.எம். கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, மாவட்ட தடகள சங்கத்தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் அன்பளிப்புத் தொகையும் சாதனையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். பின்பு பேசிய அவர், “தமிழகத்தில் முதல் முறையாக நகரங்களில் நடக்க கூடிய மாரத்தான் போட்டி குக்கிராமமான கொத்தப்புள்ளி ஊராட்சியில் நடைபெற்றுள்ளது. இதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அன்பரசை மனதாரப் பாராட்டுகிறேன். விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தியதின் மூலம் திசைமாறிச் செல்லும் பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் தங்களுக்கு தெரிந்த உடற்பயிற்சியிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடுவார்கள்.
தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் அனைத்து விளையாட்டுப் பயிற்சிகளையும் செய்யக்கூடிய விளையாட்டு அரங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் மாபெரும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. அதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு உருவாகுவர்.
சிறு கிராமங்களில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு தேர்ச்சி பெறும் மாணவன்தான் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் அளவிற்கு தகுதி பெறுகிறான். தமிழக அரசு இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதை இளைஞர்கள் பயன்படுத்தி தங்கள் கல்வி அறிவையும், வாழ்வாதாரத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவித நோயும் வராது. இதை உணர்ந்து ஆண், பெண் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். அடுத்த மாரத்தான் போட்டி மாபெரும் அளவில்; ஒன்றிய அளவில் நடத்தப்படும்” என்றார்.
மாரத்தான் போட்டியில் முதல் பரிசை பெற்ற லெயேந்தர் ஏசு, இரண்டாம் பரிசு பெற்ற அருண்சோவிட் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற மில்லர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தலா, ரூ. 10,001, ரூ. 7,001, ரூ. 5,001 பணமுடிப்பையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். அதன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. சி.பி.எம். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, இராணுவ மருத்துவமனை மருத்துவர் சுபாஸ்ரீ ஆகியோருக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். இதில் தாதன்கோட்டை ஆறுமுகம், புதுக்கோட்டை ரமேஷ் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.