விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார்கள் இயக்க பயன்படும் மின் வயர்கள் திருடுபோவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்களில் உள்ள ஆழ்குழாய் நீர்மூழ்கி மோட்டார்களின் மின் வயர்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் துண்டித்து அறுத்துச் செல்கின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் வயர்கள் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் தோட்டங்களுக்குச் சென்ற விவசாயிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கீரமங்கலம் காவல் சரகம் சேந்தன்குடி பகுதியைச் சேர்ந்த ரெங்கன், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மற்றும் ராஜகோபால் ஆகிய விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்களை திருடர்கள் துண்டித்து திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் சில வருடங்களாகவே இதுபோல் ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்கள் திருடப்படுவது வழக்கமாக உள்ளது. பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள வயர்களை திருடர்கள் நள்ளிரவில் திருடிச் சென்று விடுகின்றனர்.
விவசாயம் செய்து விளைந்ததை வீட்டிற்குக் கொண்டு சேர்ப்பதே பெரும்பாடாக இருக்கும் பொழுது வயர்களும் திருடப்பட்டால் நாங்கள் என்ன செய்வது. இதனால் ஒவ்வொரு விவசாயியும் மீண்டும் கடன் வாங்கித்தான் வயர்களை வாங்க வேண்டியுள்ளது. வயர்களின் விலையும் அதிகரித்துள்ளதால் திருடு போன சமயங்களில் தோட்டத்தில் பயிர்கள் வாடிக் கிடப்பதைப் பார்க்க மிக வருத்தமாக உள்ளது என ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.