தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இன்று திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் மற்றும் கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில், சிவகாசியில் தற்பொழுது பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
‘ஓட்டுக்குப் பணம்’ என்ற உச்சக்கட்ட பட்டுவாடா இருதரப்பிலும் நடந்தாலும், ‘எக்ஸ்ட்ரா’ கவனிப்பில் இறங்கியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. சிட்டிங் எம்.எல்.ஏ. என்ற தகுதியும், நாடார் சமுதாய வாக்குகளும், கூட்டணிக் கட்சியினரின் வாக்கு வங்கியும் தங்கப்பாண்டியனுக்கு பலம் என்றாலும், தொகுதியின் தட்பவெப்பம் அறிந்து ‘ஆன்மிகம்’ பேசி, கரன்ஸிகளை தண்ணீரைப் போல் செலவு செய்து வருகிறார் ராஜேந்திரபாலாஜி. இந்தநிலையில்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.