தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைத் திமுக கைப்பற்றியதையடுத்து, தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், 'தமிழகத்தில் அமைய உள்ள ஆட்சியில் பங்கேற்பது எங்களது நோக்கம் அல்ல' என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கும் திமுகவிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். தேர்தலுக்கு முன்பே மன ஒற்றுமையோடு, திராவிட முன்னேற்றக் கழகம் தனியாக ஆட்சி அமைக்கும் என்பது எங்கள் மத்தியிலே இருக்கக்கூடிய ஒரு மன ஒருமைப்பாடு. தமிழகத்தில் அமைய உள்ள ஆட்சியில் பங்கேற்பது எங்களது நோக்கம் அல்ல'' என்றார்.