நேற்று டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள், வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''அதையெல்லாம் சம்பந்தப்பட்ட மந்திரியிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை. அதனால் எவ்வளவு விலை உயர்ந்தது என தெரியாது. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் கேட்டால் உரிய பதில் கிடைக்கும். ஜெயலலிதா இருந்தபோதும் சரி, எம்ஜிஆர் இருந்தபோதும் சரி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை தாங்கும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கின்ற பொழுதும் தேசிய அளவில் அதிமுக அங்கம் வகித்தாலும் தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. 2021ல் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகதான் தலைமை தாங்கியது. இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கிறது. ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசு என்று சொன்னால் அது திமுக ஆட்சி தான். ஊழல் செய்ததற்காக பொன்முடி வீட்டில் ரெய்டு நடந்திருக்கிறது. செந்தில் பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் வரை போய் கைது செய்தது சரி என்று சொல்லி சிறையில் இருக்கிறார்.
சிந்தித்துப் பார்த்தால் ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஆலடி அருணா வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதற்காக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுகவிலும் வழக்குகளிலிருந்த அமைச்சர்கள் உடனடியாக நீக்கப்பட்டனர். இதுதான் தமிழகத்தினுடைய வரலாறு. ஆனால் இன்றைக்கு இருக்கின்ற முதல்வர் செந்தில் பாலாஜியை காப்பாற்றி வருகிறார். இரவோடு இரவாக அவரை எல்லா அமைச்சர்களும் போய் சந்திக்கிறார்கள், பார்க்கிறார்கள். ஆறுதல் சொல்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆறுதல் சொல்வதற்காக செல்லவில்லை. ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் பதற்றத்தில் தான் செந்தில் பாலாஜியை அர்த்த ராத்திரியில் போய்ப் பார்க்கிறார்கள்.” என்றார்.