எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது அவர் பொதுப்பணித் துறையை தன்வசம் வைத்திருந்தார். அப்போது அந்தத் துறையின் மூலம் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. மத்திய மாநில அரசுகளின் நிதிப்பங்கீட்டில் கட்டப்பட்ட இவற்றின் மொத்த மதிப்பீடு 4,080 கோடி ரூபாய். ஆனால் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டதாகவும், அதில் அதிக அளவுக்கு ஊழல்கள் நடந்திருப்பதாகவும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் போனது.
அதனை ஆராய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை, புகாரில் கூறப்பட்டது உண்மை என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, அதன் அடிப்படையில் எடப்பாடி மீது வழக்குப் பதிவு செய்ய அரசிடம் அனுமதி கேட்டது. இந்த விசயத்தில் நீண்ட நாட்களாக எந்த முடிவையும் எடுக்காத தி.மு.க. அரசு, கடந்த வாரம் ஒருவழியாக இதற்கு அனுமதி அளிக்க, அதன் அடிப்படையில், மருத்துவக் கட்டட ஊழல் தொடர்பான வழக்கை எடப்பாடி மீது பதிவு செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை.
இந்த மருத்துவக் கட்டட ஊழல் தொடர்பாக விசாரிக்க எடப்பாடிக்கு சம்மன் அனுப்புவது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசித்து வருகிறது. இதன்படி சம்மன் அனுப்பி எடப்பாடியை விசாரித்த பிறகு, அவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த ஊழல் விவகாரம் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும், கொடநாடு போல நீண்ட நாட்களுக்கு இந்த வழக்கில் அவர் தப்பிக்க முடியாது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் என்ன மாதிரியான ஆதாரங்களையும் புள்ளி விபரங்களையும் திரட்டியிருக்கிறார்கள் என்கிற விபரங்கள் முன்கூட்டியே லஞ்ச ஒழிப்புத்துறையில் இருக்கும் சிலர் மூலம் எடப்பாடிக்குப் போயிருக்கிறதாம். அதைப் பார்த்து ஷாக் ஆன அவர், இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது என்று இப்போதே சட்ட ஆலோசனையில் இறங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.