சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக இருளர் சமூக மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிறந்தது முதல் சாதிச் சான்று இல்லாததால் அவர்களின் குழந்தைகள் கல்வியறிவு பெற முடியாமல் கூலி வேலைகளைச் செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள மக்கள் சாதிச் சான்று கேட்டு அவ்வப்போது உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.
ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் கொத்தட்டை பகுதியில் உள்ள இருளர் இனமக்கள் சாதிச் சான்று கேட்டு மனு கொடுத்ததோடு, இதற்கு முன் பல ஆண்டுகளாக மனு கொடுத்த விவரத்தையும் எடுத்துக் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் கொத்தட்டை கிராமத்தில் வசிக்கும் இருளர் மக்கள் குறித்து கடந்த 5 மாதங்களாகக் கள ஆய்வு விசாரணை செய்ததின் அடிப்படையில் அப்பகுதியில் வசிக்கும் 115 இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கினார்.
சான்றிதழைப் பெற்றுக்கொண்ட இருளர் சமூக மக்கள், பல ஆண்டுகளாகச் சாதிச் சான்று இல்லாமல் கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட தங்களுக்குச் சாதிச் சான்று கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வழங்கியதற்கு சார் ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, கட்சியின் கொத்தட்டை இருளர் இன மக்களின் கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.