Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்.!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021
Intensive work to select a new Vice Chancellor for Annamalai University!

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு அரசின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து முதல் துணைவேந்தராக மணியன் பதவியேற்றார். அதன்பின்னர், அப்பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக முருகேசன் பதவியேற்று பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் ஜூன் 2-ம்  தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

துணைவேந்தரைத் தேர்வு செய்யும் குழுவில், டெல்லி இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வரராவ் (தலைவர் ), திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் திருமலைசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் இணைந்து புதிய துணை வேந்தர் பொறுப்புக்குத் தகுதியானவர்களைக் கொண்ட பட்டியலைத் தயார் செய்வர். அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களை இந்த குழு பகுப்பாய்வு செய்து, அதிலிருந்து தகுதியான நபர்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கும்.  

 

இதில் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவார். அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியைப் பிடிப்பதற்காகப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், முன்னாள் பதிவாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்