வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள், அணைகள் நிரம்பியுள்ளன.
இந்த நிலையில், அரசு மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள எழிலகத்தில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. உயிரிழப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் 305 முகாம்களும், மற்ற மாவட்டங்களில் 5,106 முகாம்களும் அமைத்துவருகிறோம். மாநில பேரிடர் மீட்புப் படையில் 1,000 பேர் தயார் நிலையில் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.