உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோதே மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு கொடுத்தவர்களின் வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும், மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும், நிறுத்திவைக்கப்பட்ட தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதே மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு கொடுத்தவர்கள் தாக்கல் செய்த வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதே வேளையில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மறு வாக்கு எண்ணிக்கை கோரி மனு அளித்திருந்தால், அது ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அது தொடர்பான வழக்கை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் என்றும் கூறியுள்ளார். ஒரு சில வழக்குகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.