தமிழ்ப் பதிப்பக வரலாற்றில் சாதனை நிகழ்வாக ஒரே மேடையில் மூன்று சகோதரிகளின் நூல்கள் காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளியில் 23.11.2019 அன்று இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக வெளியிடப்பட்டது.
முனைவர். சுவேதா, பா.தென்றல், பா.லெட்சுமி மூவரும் உடன் பிறந்த சகோதரிகள். கலை இலக்கியத் தளத்திலும் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மூவரும் முதல் முறையாக எழுதிய இலக்கிய "ஆளுமையில் சொல்வேந்தர்" (ஜீ.சுவேதா), "உயிர் பருகும் மழை" (பா.தென்றல்), "மழையில் நனையும் வெயில்" ( பா.லெட்சுமி) ஆகிய மூன்று நூல்களையும் அவர்களது பெற்றோர் ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி மேனாள் செயலர் வே.பாலசுப்பிரமணின், அவரது துணைவியார் கோ.ஆனந்தா ஆகியோர் வெளியிட்டு முன்னிலை வகிக்க,முனைவர் ரெ.சந்திரமோகன், தமுஎகச மாவட்டத் தலைவர் ஜீவசிந்தன், ஆசிரியர் பா.சரவணன் மூவரும் முதல் பிரதிகள் பெற்றுக் கொண்டனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்புறு கர்னல் பேராசியர் நா.இராஜேந்திரன் தலைமை வகித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி, தலைமையுரையாற்றிய பொழுது, "தான் இந்த இடத்தை அடைவதற்குப் படிக்கட்டுகளாக இருந்தவை நூல்களே. துணிக்கடை, நகைக்கடை திறப்பு விழாவிற்கு என்னை அழைக்காதீர்கள். புத்தகக்கடை, புத்தகக் கண்காட்சி அல்லது பள்ளிக்கு அழைத்தால், அதுவும் அரசுப் பள்ளிக்கு எனில், மகிழ்ச்சியாக வருகிறேன். எழுதுவது என்பது மிகக் கடினமே. .அதுவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் படைப்பாளிகளாக இருப்பது மிகவும் அரிதானது, அது அதிசயம் " என்றார். ஒவ்வொரு நூலையும் முழுமையாகப் படித்து, நூலாசிரியர்கள் குறிப்புகளையும் சொல்லி, கருத்துகள், கவிதைகள் குறித்தும் மிகவும் சிறப்பாகப் பேசினார்.
இந்நிகழ்வில் இந்து தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் கவிஞர் மு.முருகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, "தனது வாழ்க்கையையே இனிய நந்தவனம் என்ற ஒரு புத்தகத்துக்குள் அடைகாத்துக் கொண்டிருக்கிற இனிய மனிதரது பதிப்பக வெளியீட்டில் மிகச் சிறப்பான வடிவமைப்புடன் மூன்று நூல்களும் வெளிவந்திருக்கின்றன. நான் பார்த்தவரையில் அதிகப் பெண்கள் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழா இதுதான்.
இலக்கியம் ஒன்று தான் மனித வாழ்வை இன்னும் ஈரமாக வைத்திருக்கின்றது. ஒரு பெண் எழுதுவது 100 ஆண்கள் எழுதுவதற்குச் சமம். நுட்பமாக மொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் தமிழ்ச் சமூகத்தில் பெண்ணெழுத்து இன்றும் குறைவாகவே இருக்கிறது. ஒரு பெண் எழுதிய கவிதையை அவள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிறார்கள். பெண் எழுதிய கவிதையைப் பெண்ணின் அனுபவமாகப் பார்க்காதீர்கள்" என்று கவிதைகள் குறித்தும், பெண்ணைழுத்து மீது சமூகப் பார்வை குறித்தும் சிறப்புரையாற்றினார்.
நாளந்தா புத்தகக்கடை உரிமையாளர் செம்புலிங்கம் வாழ்த்துரை வழங்க, முனைவர் க.சுமதி, முனைவர் இரா.வனிதா, எழுத்தாளர் ம.ஜெயமேரி ஆகியோர் நூல்கள் குறித்து ஆய்வுரை வழங்கினர். முன்னதாக, ஆசிரியர் பா.முத்து வள்ளி அனைவரையும் வரவேற்க, நூலாசிரியர்கள் மூவரும் ஏற்புரையாகத் தங்கள் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவாக ஆசிரியர் பா.சரஸ்வதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் . பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்வைத் தொகுத்து வழங்கிச் சிறப்பாக வழிநடத்தினார்.
- இலக்கியன்