கடலூர் என்.எல்.சியில் சுதந்திர தின விழா!
2025-ஆம் ஆண்டிற்குள் என்.எல்.சி நிறுவனத்தின் மின் உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட்டாக உயரும் என என்.எல்.சி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா தெரிவித்தார்.
70-ஆண்டு சுதந்திர தின விழா என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் நெய்வேலி பாரதி விளையாட்டரங்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது மத்திய தொழிலக பாதுகாப்பு படை, ஊர்காவல் படை மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் சீருடை அணிவகுப்பை பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திர தின உரையாற்றினார்.
அவர் தனது உரையில் “நெய்வேலியில் மட்டும் இருந்த என்.எல்.சியின் செயல்பாடுகள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தேசிய அளவில் வர்த்தகத்தை செயல்படுத்துவதாகவும், நிலக்கரி மட்டுமல்லாது, சூரிய ஒளி, காற்றாலை போன்ற மாற்று மின் திட்டங்களையும் செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும் புதிய, மாற்று மின் திட்டங்கள் மூலம் 2025-ஆம் ஆண்டிற்குள் என்.எல்.சி நிறுவனத்தின் மின் உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட்டாக உயரும் எனவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பல்துறைகளிலும் சாதனை புரிந்த, சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- சுந்தரபாண்டியன்