தமிழகத்தில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபைனான்சியர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
மதுரையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று (02/08/2022) காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையைத் தொடங்கினர். இன்றும் இரண்டாவது நாளாக சோதனையானது நடைபெற்று வருகிறது. பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வரும் இவர், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்தும், விநியோகித்து வருகிறார்.
சென்னையைத் தொடர்ந்து, மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடுகள், பைனான்ஸ் அலுவலகங்கள், தங்கும் விடுதி மற்றும் சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் இரவைக் கடந்து சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைபுலி தாணுவுக்கு சொந்தமான தியாகராயர் நகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டூடியோ கிரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் ஞானவேல் ராஜாவின் வீடு மற்றும் அலுவலகம், கைதி, சுல்தான் ஆகிய படங்களின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் வீடு, அலுவலகம், விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளரான சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.
அண்மையில் வெளியான படங்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில், தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை நடப்பதாகவும், இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.