கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த முத்தாண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்நாதன். அரசு ஒப்பந்ததாரான அருள்நாதன் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் 500, 2000 ரூபாய் தாள்கள் கீழே கிடப்பதைக் கண்ட அருள்நாதன் அதனை எடுத்துள்ளார். அப்பணத்தின் மதிப்பு 1.40 லட்சம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக அப்பணத்தை எடுத்துக்கொண்டு விருத்தாச்சலம் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணனிடம் சென்று ஒப்படைத்தார்.
இச்செயலைப் பாராட்டிய காவல்துறை அதிகாரிகள் அருள்நாதனுடைய நேர்மைத் தன்மையைக் கௌரவித்து, அப்பணத்தைப் பெற்றுக்கொண்டனர். மேலும் அப்பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி அளித்தார்.
இந்நிலையில் மனிதநேய அடிப்படையில் பணத்தை ஒப்படைத்த அருள்நாதனின் செயலைக் கண்டு, ஏ.கே சமூக அறக்கட்டளை சார்பில் பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டது. அருள்நாதனின் நேர்மையான செயல்பாடு அனைவரிடமும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.