சேலத்தை அடுத்துள்ள திருமலைகிரி கொல்லர் தெருவை சேர்ந்தவர் முத்து. இவருடைய தாயார் பழனியம்மாள் (75). கடந்த பிப். 27ம் தேதியன்று, அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே மூதாட்டி பழனியம்மாள் அமர்ந்து இருந்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், மூதாட்டியின் அருகே சென்று நலம் விசாரிப்பதுபோல் பேச்சுக் கொடுத்தார். பின்னர் அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தியை பறிக்க முயன்றபோது மூதாட்டி கத்தி கூச்சல் போட்டார். அதனால் ஆத்திரத்தில் பழனியம்மாளை அந்த இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இந்த வழக்கில் இரும்பாலை காவல்துறையினர், மூதாட்டியை கொன்றதாக வேடுகாத்தாம்பட்டி பாறை வட்டத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பாலாஜி (19) என்பவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
தொடர் விசாரணையில், பாலாஜி அப்பகுதியில் சிலரிடம் பணம் கடனாகப் பெற்றதும், அதை திருப்பிக் கேட்போரை மிரட்டியும் வந்தது தெரியவந்துள்ளது.
பொது அமைதிக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், அவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த 9ம் தேதி, பாலாஜியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கைது ஆணை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாலாஜியிடம் நேரில் சார்வு செய்யப்பட்டது.