புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர் ஒருவர் தேனிமலை மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய நிலையில், அவரை தீயணைப்புத்துறை புத்தி சொல்லி மீட்டுக் கொண்டுவந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த தேனிமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சண்முகம். இவர் சுமார் 700 அடி உயரம் கொண்ட தேனிமலை முருகன்கோவில் மலை உச்சியில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்த சண்முகத்தின் பெற்றோர்களும் உறவினர்களும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அப்போது, தான் வைக்கும் 5 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் கீழே இறங்குவேன் எனக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஜாதியை ஒழிக்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கருவேலமரங்கள் மற்றும் பிளாஸ்டிக்கை அழிக்க வேண்டும், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார்.
மேலும், “என்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்து பார்த்து இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகச் சொன்னால்தான் கீழே இறங்குவேன். எனது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் என்னை மீட்க நினைத்தால் நான் குதித்து இறந்துவிடுவேன்” என கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சண்முகம் கீழே இறங்கவில்லை. பெற்றோர்கள் எவ்வளவோ கண்ணீர்விட்டு அழுதபோதிலும் சண்முகம் கீழே இறங்கவில்லை. ஒருகட்டத்தில் நேரம் ஆக ஆக பாறையில் சூடு தாங்க முடியாத சண்முகம் கீழே இறங்க, தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டு புத்தி சொல்லி சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.