பள்ளிபாளையம் அருகே, கோவில் திடலில் தூங்கிக்கொண்டிருந்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், காவேரி ரயில் நிலையம் அருகே உள்ள கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (46). இவர், ஆதித்தமிழர் பேரவையின் நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்துவந்தார். மேலும், கடந்த 6 ஆண்டுகளாக அருந்தமிழர் பேரவை என்ற தனி அமைப்பை உருவாக்கி, அதன் பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார்.
இந்த அமைப்புகளின் மூலம் அருந்ததியர் சமூக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 5) இரவு, வீடு அருகே உள்ள மதுரைவீரன் மாரியம்மன் கோயில் திடலில் ஒரு சிமெண்ட் பெஞ்சில் ரவி படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவு கடந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள், ரவியை தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) காலை அப்பகுதி மக்கள் ரவி, ரத்த வெள்ளத்தில் கொலையுண்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலம், உடற்கூராய்வுக்காகப் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
காவல்துறையினர், மோப்ப நாய் ஷீபா உதவியுடன் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். நிகழ்விடத்தில் இருந்து காவிரி ஆறுவரை சென்ற மோப்ப நாய் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றது.
அருந்ததியர் சமூக மக்களின் பிரச்சனைகளில் ரவி அடிக்கடி தலையிட்டுப் பஞ்சாயத்து பேசிவந்துள்ளார். சாதி மாறி காதல் திருமணம் செய்து வைத்தல், நிலத்தகராறு, அடிதடி பிரச்சனைகளில் தலையிட்டுவந்துள்ளார்.
அதனால் ரவி செயற்பாடுகளைப் பிடிக்காதவர்கள் யாராவது கூலிப்படையை வைத்து அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ரவியின் செல்ஃபோனில் பதிவாகியுள்ள எண்களைக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பள்ளிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.