கமுதியில் காவலர்கள் வாகனம் என்றுகூட பாராமல் சில இளைஞர்கள் வாகனத்தின் மீது ஏறியும், வாகனத்தை வழிமறித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று பாதுகாப்புப் பணிக்காக போலீசார் வாகனம் வந்தபொழுது அங்கு இருந்த சில இளைஞர்கள் காவல்துறையின் வாகனத்திலிருந்து காவலர்களைக் கீழே இறக்கிவிட்டுவிட்டு ஜீப்பின் மீது ஏறி தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டனர். அதேபோல் நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்க வந்த தாசில்தாரின் வாகனத்தின் மீதும் ஏறிய அந்த இளைஞர்கள் ஆட்டம் போட்டனர்.
இளைஞர்களின் இந்த செயலால் ஆத்திரமடைந்த போலீசார் இதுகுறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த நிலையில், விழா அமைதியாக நடைபெற வேண்டும் எனவே காவலர்கள் பொறுமை காக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் இடையூறு ஏற்படுத்திய அந்த இளைஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர். அரசு வாகனத்தின் மீது ஏறி இளைஞர்கள் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.