தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு இன்று (10/05/2022) பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "காவல்துறையினருக்கு வார விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது; காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத மோதலை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை; மத துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை. சாலை விபத்துகளைக் குறைக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரூபாய் 6.47 கோடியில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கப்படும். கடவுச்சீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வர வேண்டிய நிலை மாற்றப்படும். தமிழகத்தில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். காவல்துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். பொள்ளாச்சியில் 266 புதிய காவலர் குடியிருப்புகள் கட்டப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள், இளைஞர்களைக் காப்பாற்ற கஞ்சா வேட்டை தொடர்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ந்த போதை கலாச்சாரத்துக்கு தி.மு.க. ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் விட்டு சென்ற போதைப்பொருளை ஒழிக்கவே 'ஆப்ரேஷன் கஞ்சா திட்டம்' ஏற்படுத்தப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அநாகரீக எல்லையைத் தாண்டி விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமூக நீதி, சட்ட நீதி என அனைவருக்குமான ஆட்சிதான் 'திராவிட மாடல்'.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க பருந்து என்ற செயலி உருவாக்கப்படும். கழிவுச் செய்யப்பட்ட காவல்நிலைய காவலர்களுக்கான 200 ஜீப்புகளுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவைப் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவாக மறுசீரமைக்கப்படும். போதைப்பொருள் தடுப்பில் ஈடுபடும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும்.
அசோக் நகர் காவலர் பயிற்சிக் கல்லூரி வண்டலூர் உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும். திட்டமிட்டக் குற்ற நுண்ணறிவுப் பிரிவு ஆளிநர்களுக்கு 5% சிறப்பு ஊதியமாக அளிக்கப்படும். காவலர் நல மேம்பாட்டிற்காக மகிழ்ச்சி என்ற செயல்திட்டம் ரூபாய் 53 லட்சத்தில் செயல்படுத்தப்படும். பெண் காவலர்களுக்கான பணி, வாழ்க்கை சமநிலை பயிற்சிக்கு ஆனந்தம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். தீயணைப்பு, சிறைத்துறைப் பணியாளர்களுக்கு காவல் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் வசதி.
சேலம், நெல்லை, திருப்பூர், திருச்சியில் காவல் துணை ஆணையர் பதவிகள் உருவாக்கப்படும். இரு வாரங்களுக்கு ஒருமுறை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம். இளம் மற்றும் முதல் முறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பறவை என்னும் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பெருநகர காவலில் மேலும் மூன்று வழித்தடங்களில் போக்குவரத்து ஒழுங்குமுறைக் கண்காணிப்பு மண்டலம் அமைக்கப்படும்". இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.