தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த நிலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் நான்காவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கடலூர் ஆகிய இடங்களில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கிய நிலையில், நாளை குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''வெள்ளச் சேதம் குறித்து பிரதமரைச் சந்தித்து நிதி கோரிக்கை வைப்போம். என்னுடைய வேலை மக்களுக்காக பணியாற்றுவது தான். மக்கள் எனக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்கள். இன்றைக்கும் சொல்கிறேன் ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்துத் தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய கொள்கை. எதிர்க்கட்சி எந்த புகார் செய்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அவர்கள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை மழை முடிந்த பிறகு அதற்கென்று ஒரு கமிஷன் வைக்கப்பட்டு, எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்று அறிந்து நிச்சயமாக யார் குற்றவாளிகளோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'' என்றார்.