போராட்டத்தை அடக்குமுறைகளால் நசுக்க நினைத்தால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்: வைகோ
ஹைட்ரோ கார்பன் எடுக்கத் தடை விதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்குமுறைகளால் நசுக்கிவிடலாம் என தமிழக அரசு நினைத்தால், அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு ஷேல், ஹைட்ரோ கார்பன் எடுக்கத் தடை விதிக்கக் கோரி வடகாடு நெடுவாசல் விவசாய சங்கம் சார்பில் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ். நம்பியார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வைகோ ஆஜராகி வாதாடினார். அப்போது, தமிழக அரசு சார்பில் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி வழக்கை வரும் ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
ஹைட்ரோ கார்பன் எடுக்கத் தடை விதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்குமுறைகளால் நசுக்கிவிடலாம் என தமிழக அரசு நினைத்தால், அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக மறு விசாரணை நடத்தப்பட வேண்டுமா என கேள்வி எழுப்பியிருக்கிறது. இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.
எனவே, 26 ஆண்டுகளாக இளமைப் பருவத்தை இழந்து சிறையில் வாடும் பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.