திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், நவம்பர் 29 -ஆம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. மகாதீபம் ஏற்றப்படும் நேரத்தில் அண்ணாமலையார் கோவிலுக்குள் கொடிமரம் முன்பு சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து, 5 நிமிடங்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அர்த்தநாரீஸ்வரர். அவர் சன்னதியில் இருந்து வெளியே வந்து மலை உச்சியை நோக்கும்போது கொடிமரம் முன்பும், மலை உச்சியிலும் சரியாகத் தீபம் ஏற்றுவார்கள்.
இந்த அர்த்தநாரீஸ்வரரை காண, பக்தர்கள் அதிகம் விரும்புவர். 20 ஆண்டுக்கு முன்பு வரை தீபத் திருவிழாவின்போது சர்வ சாதாரணமாகப் பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். காலப்போக்கில் கட்டுப்பாடுகள் அதிகரித்து, போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, இவ்வளவு பேர் தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என மாற்றப்பட்டது.
இலவச தரிசனத்தில் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிப்பதில் குழப்பங்கள், வி.ஐ.பி. அனுமதி சீட் அதீத தொகைக்கு விற்பனை எனக் குழப்படிகள் நடந்து நீதிமன்றத்தில் இந்து அமைப்பு ஒன்று வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், தீபத் தரிசனத்தில் வி.ஐ.பி முறையை ரத்து செய்தது. ஆட்சியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகார நிர்வாக வரம்பில் உள்ளவர்கள் யார், யாருக்குக் கோவிலுக்குள் செல்லலாம் என வரைமுறை செய்தது நீதிமன்றம்.
வி.ஐ.பி.க்கள் கட்டணத் தரிசனம் செய்யலாம் என்றதால், 500 ரூபாய், 600 ரூபாய் எனக் கட்டணத் தரிசன டிக்கட்களை சில ஆயிரம் விற்பனை செய்தது கோவில் நிர்வாகம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் 2 ஆயிரம் பக்தர்கள், இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குத் தலைமுறையாகத் திருவிழா செய்பவர்கள் கட்டளைதாரர்கள் என்றும், திருவிழா மற்றும் முக்கிய நிகழ்வுகளில் நன்கொடை வழங்குபவர்கள் உபயதாரர்கள் எனவும் இரண்டு வகையினர் உண்டு. இவர்களுக்கும் கோவில் சார்பில் தீபத் திருவிழாவின்போது அந்தக் குடும்பத்தில், 4 பேருக்கு என்கிற கணக்கில் அனுமதி அட்டை வழங்கப்படுவது வழக்கம்.
இந்த கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் அனுமதி அட்டையை அதிகமாக அச்சடித்து ஒவ்வொரு ஆண்டும் கோவில் நிர்வாகத்தில் உள்ள சிலர் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என்கிற விலையில் பணக்காரர்களுக்கும் ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கும் விற்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்தாண்டு ஆட்சியாளர்கள், அரசின் உயர் அதிகாரிகள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், முக்கிய மக்கள் பிரதிநிதிகள், கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோவிலை சேர்ந்த சிலர் 20 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு கட்டளைதாரர், உபயதாரர் என்கிற பெயரில் கோவிலுக்குள் செல்வதற்கான அனுமதி கடிதத்தை பலருக்கும் தந்துள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்தாண்டு வரை அதிகாரப்பூர்வமற்ற முறையில், முக்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள், நீதித்துறை, காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கான தீபத் திருவிழாவாக இருந்தது. இந்தாண்டு அதிகாரப்பூர்வமாகவே அதிகாரத்தில் இருப்பவர்கள், பணக்காரர்களுக்கான தீபத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சாமன்ய மக்களின் தீபத் திருவிழாவாக இது என்று நடக்கும் என்பதே பக்தர்களின் ஏக்கமாக உள்ளது.